வைகுண்ட ஏகாதசி விழா : ஸ்ரீரங்கத்தில் ஜன.1ல் சொர்க்க வாசல் திறப்பு
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், நாலாயிரதிவ்ய பிரபந்தத்தை பகல் பத்து மற்றும் ராப்பத்து என 20 நாட்கள் அபிநயத்துடன் படிக்கின்றனர். இதற்காக, ஸ்ரீரங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று நாலாயிர திவ்ய பிரபந்தத்தை படிக்கத் தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும். இந்த நிகழ்ச்சி மூலஸ்தானம் முன்பு காயத்ரி மண்டபத்தில் 21ம் தேதி இரவு நடைபெறும். பகல்பத்து உற்சவம் வரும் 22ம் தேதி துவங்குகிறது. பகல் பத்து நிகழ்ச்சியின் 10ம் நாளான டிசம்பர் 31ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரமும், ஜனவரி 1ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு ஜனவரி 1ம் தேதி அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பு அன்று நம்பெருமாள் ரத்தினங்கி அணிந்து வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு தினமான ஜனவரி 1ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் துவங்குகிறது. ராப்பத்து நிகழ்ச்சியின் 7ம் நாளான ஜனவரி 7ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8ம் நாளான ஜனவரி 8ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரூ.43 கோடியில் யாத்ரி நிவாஸ் திறக்கப்பட்டது. இருப்பினும் செயல்பாட்டுக்கு வரவில்லை. சொர்க்கவாசல் திறப்பு தினத்துக்குள் (ஜன. 1) இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.