மதுரை: குவாரி முறைகேடு தொடர்பாக கிரானைட் குவாரிகளில் சகாயம் நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டார். பல கிராமங்களில் அவரிடம் பொது மக்கள் மனுக்கள் கொடுத்தனர். கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில், அறிவியல் துணை நகர இயக்குநர் சகாயம் டிச. 3ல் மதுரையில் முதற்கட்ட விசாரணையை துவக்கினார். கடந்த 15ம் தேதி 2ம் கட்ட விசாரணையை துவக்கினார். முதல் கட்டமாக, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், வருவாய்த்துறையில் ஆர்டிஓ செந்தில்குமாரி, தாசில்தார் மணிமாறன் மற்றும் 10 விஏஓக்களிடம் சகாயம் விசாரணை நடத்தினார். அவர்களிடம் இருந்து முக்கிய கோப்புகளையும் பெற்றார்.
விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகுமாறு, கனிமவளத்துறையின் உதவி இயக்குநருக்கு சகாயம் சம்மன் அனுப்பி இருந்தார். நேற்று கனிமவள உதவி இயக்குநர் ஆறுமுகநயினார் விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் புவியியலர் விஜயராகவன் இருந்தார். மாவட்டத்தில் எத்தனை கிரானைட் குவாரிகள் உள்ளன, இயங்கி கொண்டிருப்பவை எத்தனை, முறைகேடு நடந்த குவாரிகள் எத்தனை, ஒவ்வொரு குவாரிக்கும் கிரானைட் கற்கள் எத்தனை கியூபிக் மீட்டர் வெட்ட அனுமதி கொடுக்கப்பட்டது, அனுமதியை மீறி எவ்வளவு கியூபிக் மீட்டர் கிரானைட் கற்கள் வெட்டப்பட்டது, இதன் மீது குற்ற நடவடிக்கை மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா, முறைகேட்டில் ஈடுபட்ட குவாரிகளில் இருந்து மீட்கப்பட்ட கிரானைட் கற்கள் எவ்வளவு கியூபிக் மீட்டர், குவாரி உரிமையாளர்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்டதா, அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, முறைகேட்டால் எத்தனை குவாரி உரிமம் ரத்து செய்யப்பட்டது என்பன குறித்து உதவி இயக்குநரிடம், சகாயம் விசாரித்தார்.
விதியை மீறி அரசு புறம்போக்கு நிலம், கண்மாய், ஊருணி, மலைகள், ஆக்கிரமிப்பு செய்து அந்த பகுதியில் எவ்வளவு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது, குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா, எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், தற்போது வழக்கின் நிலை என பல்வேறு கேள்விகளை கேட்டு துருவி, துருவி விசாரணை நடத்தினார். இதற்கான ஆவணங்களையும் பெற்றார். இந்த விசாரணை ஒரு மணிநேரம் நடந்தது. பின்பு 5.40 மணிக்கு விசாரணை முடிந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். பின்பு பொதுமக்களிடம் சகாயம் மனுக்களை பெற்றார். இந்நிலையில் இன்று திருமோகூர், திருவாதவூர் உள்ளிட்ட கிராம பகுதியில் உள்ள ஒவ்வொரு குவாரிகளையும் சகாயம் ஆய்வு செய்தார். அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். ஆய்வில் கனிமவளம், வருவாய்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.