காஷ்மீர் லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல்
புதுடெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் லடாக் எல்லை பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி நுழைந்தது. இந்திய ராணுவம் தலையிட்டு அவர்களை திருப்பி அனுப்பியது. லடாக் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி நுழைவது இந்திய ராணுவத்துக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கே உள்ள அருணாச்சல பிரதேச மாநிலம் எங்களுக்கு சொந்தம் என சீனா கூறிவருகிறது. இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் சீனா செல்ல விசா தேவையில்லை என வம்படித்து வருகிறது. இதே போல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் எல்லை பகுதியிலும் 40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.
அவர்களை சமாதானப்படுத்தும் சாக்கில் சீன ராணுவம் அடிக்கடி இந்திய எல்லைக்குள் புகுந்து முகாம்கள் அமைத்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இந்திய எல்லையில் உள்ள சுமுர் பகுதியில் சீன ராணுவம் புகுந்து முகாம் அமைத்தது. இந்திய ராணுவம் தலையிட்டு நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் சீன பகுதிக்கு திரும்பி சென்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் சீன ராணுவம் மீண்டும் இந்த பகுதியில் அத்துமீறி நுழைந்தது. இதை அறிந்த இந்திய ராணுவத்தினர் உடனடியாக அங்கு விரைந்தனர். சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின்னர் சீன ராணுவத்தினர் அவர்களது பகுதிக்கு திரும்பி சென்றனர். கடந்த ஏப்ரல் மாதம் லடாக் பகுதியில் புகுந்த சீன ராணுவத்தினர் சுமார் 21 நாட்கள் அங்கு முகாமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.