புதுடெல்லி மாநாட்டில் சைபர் பாதுகாப்பு குறித்து 8 வயது சிறுவன் விளக்கம்
புதுடெல்லி: உலகளவில் சைபர் குற்றங்கள் தடுப்பது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதுடெல்லியில் சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது மாணவன் சைபர் பாதுகாப்பு குறித்து பேச இருக்கிறார்.உலகளவில் இன்டர்நெட் மூலம் பல்வேறு குற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. நவீன யுக்திகளின் மூலம் வங்கிகளில் பணம் திருடப்படுகிறது. உலக நாடுகளின் முக்கிய ரகசியங்கள் ஹேக்கிங் மூலம் திருடப்பட்டு வருகிறது.
இத்தகைய சைபர் குற்றங்களை தடுக்கும் நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்கான சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு புதுடெல்லியில் இன்று துவங்கியது. இம்மாநாட்டை மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் வி.கே.சிங் துவங்கி வைத்தார்.இம்மாநாட்டின் 2-ம் நாளான நாளை சைபர் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது சிறுவன் ரூபன் பால் உரை நிகழ்த்துகிறார். இவரது தந்தை மனோ பால், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 2000-ம் ஆண்டு மனோபால் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறினார்.
அமெரிக்காவில் வசிக்கும் 8 வயதான ரூபன் பால், கம்ப்யூட்டர் மூலம் சைபர் குற்றங்களைத் தடுப்பது குறித்தும், ஒட்டுமொத்த கம்ப்யூட்டர் தொடர்பான சைபர் குற்றங்களை அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியும் திறன்கள் குறித்து கடந்த மாதம் ஹுஸ்டன் பாதுகாப்பு மாநாட்டில் பேசியுள்ளார். சைபர் குற்றங்கள் தடுப்பது குறித்து புதிய புரோகிராம்களை உருவாக்கி வரும் ரூபன்பால் தனது தந்தையுடன் சேர்ந்து கம்ப்யூட்டர் கேம்ஸ் உருவாக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.