கிளுகிளுப்பான படத்துக்கு என் பெயரா? ராம் கோபால் வர்மாவுக்கு ஸ்ரீதேவி திடீர் நோட்டீஸ்
மும்பை: கிளுகிளுப்பான படத்துக்கு ஸ்ரீதேவி என்று பெயர் வைத்த ராம் கோபால் வர்மாவுக்கு நடிகை ஸ்ரீதேவி நோட்டீஸ் அனுப்பினார்.சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி அவ்வப்போது பிரச்னையில் சிக்கி கொள்பவர் ராம் கோபால் வர்மா. அடுத்து ‘சாவித்ரி‘ என்ற படத்தை தெலுங்கு மொழியில் இயக்கி இருக்கிறார். ஆசிரியை மீது சிறுவன் ஒருவன் காமம்கொள்வதுபோல் இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான போஸ்டர் வெளியிடப்பட்டது. அதற்கு பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தி வர்மாவின் கொடும்பாவியும் எரித்தனர். சிறுவர்களின் மனதை கெடுக்கும் வகையில் இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதாக எழுந்த புகாரையடுத்து வர்மாவுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இந்நிலையில் ‘சாவித்ரி‘ டைட்டிலுக்கு அனுமதி கிடைக்காததால் ‘ஸ்ரீதேவி‘ என படத்துக்கு தலைப்பை மாற்றினார். இதையறிந்து நடிகை ஸ்ரீதேவி ஷாக் ஆனார். இதுகுறித்து கணவர் போனிகபூரிடம் ஆலோசனை நடத்தினார். பிறகு போனிகபூர், ராம் கோபால் வர்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பட டைட்டிலை மாற்றும்படி கூறினார். ஆனால் அதை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதை யடுத்து அவருக்கு ஸ்ரீதேவி சார்பில் போனிகபூர் நோட்டீஸ் அனுப்பினார். இதுபற்றி போனிகபூர் கூறும்போது,‘வர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது உண்மைதான். தவறான கண்ணோட்டத்துடன் கூடிய ஒரு படத்துக்கு என் மனைவி (ஸ்ரீதேவி) பெயரை வைத்ததை ஏற்க முடியாது‘ என்றார்.