சேலத்தில் நள்ளிரவில் அரசு பஸ், கார்களின் மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு
சேலம்: சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ் ஒன்று, 30க்கும் அதிகமான பயணிகளுடன் நேற்று மாலை சேலம் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சை குமார் ஓட்டி வந்தார். நேற்றிரவு 12 மணிஅளவில், சேலம் அம்மாப்பேட்டை மிலிடெரி ரோடு அருகே பஸ் வந்தது. அப்போது அங்கிருந்த புதர் மறைவில் மறைந்திருந்த மர்ம நபர்கள், பஸ் மீது கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் பலர் லேசான காயம் அடைந்தனர். மேலும், அந்த வழியாக அடுத்தடுத்து வந்த 2 கார்களின் மீதும் மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் கார்களின் முன்புற கண்ணாடி உடைந்தது. இதுபற்றிய தகவலறிந்ததும், அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அதில், பைக்கில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சென்ற 2 பேர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில், அப்பகுதியில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.