ஜெயலலிதாவை பற்றிதான் முதல்வர் கவலைப்படுகிறார்: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
கடலூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் கடலூரில்அளித்த பேட்டி:நெய்வேலியில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் மற்றும் சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 38 நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது வரவேற்கக்கூடியது. 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்னையை தொழிலாளர்களுக்கும் என்.எல்.சி நிறுவனத்திற்கும் இடையேயான பிரச்னையாக கருதக்கூடாது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், மாநில அரசும் இப்பிரச்னையில் தலையிட்டு சுமூக தீர்வினை காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் போராட்டத்தில் குதிக்க வேண்டும்.
புதிய முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவை பற்றிதான் கவலைப்படுகிறது. அவருக்கு ஆதரவாக மக்களை தூண்டி விடுகிறது. மக்கள் நலன்களை பற்றி அக்கறைகொள்ளவில்லை.ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கும் இந்த தீர்ப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து தமிழ்நாட்டில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபூண்டுள்ளது. தமிழ்நாட்டில் பாஜ காலூன்ற முடியாது. நடிகர் ரஜனிகாந்த் கட்சி தொடங்குவது அவரின் தனிப்பட்ட முடிவு.