மயிலாப்பூரில் இன்று காலை பெண்ணை சரமாரி தாக்கி 11 பவுன் செயின் பறிப்பு
சென்னை: மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அபூர்வசிகாமணி. இவரது மனைவி மல்லிகா (57). தம்பதிகள் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளனர். மல்லிகா தினமும் தனது வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்று பால் பாக்கெட் வாங்கி வருவது வழக்கம். இன்று காலை 5.30 மணியளவில் அருகில் உள்ள கடைக்கு பால் பாக்கெட் வாங்க நடந்து சென்றார். அப்போது, அங்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் மல்லிகா கழுத்தில் கிடந்த செயினை பறித்தனர். 11 பவுன் செயின் என்பதால் அது அறுபடவில்லை. கொள்ளையர் வேகமாக இழுத்ததில் மல்லிகா கழுத்து அறுபட்டு ரத்தம் வந்தது. மல்லிகா அலறி கூச்சலிட்டார். செயினை பிடித்துக் கொண்டு கொள்ளையர்களுடன் போராடினார்.
பின்னர், பைக்கில் இருந்து இறங்கி வந்த ஒரு வாலிபர், மல்லிகாவை சரமாரியாக தாக்கினார். இதில், நிலை குலைந்து மல்லிகா கீழே விழுந்தார். அவரது கழுத்தில் கிடந்த செயினை கழற்றி சென்றார். பின்னர் இரு வாலிபர்களும் பைக்கில் சென்றனர். பின்னர், காயங்களுடன் சென்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மல்லிகா புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கி உள்ளனர். காலையில் பால் வாங்க சென்ற போது, பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் மயிலாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் தொடர்ந்து நடந்து வரும் செயின் பறிப்பு சம்பவங்கள் பெண்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.