சென்னை: அரசு, பொதுத்துறை மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க உடனடி நடிவடிக்கை எடுக்க வேண்டும் என தொமுச பேரவை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து தொமுச பேரவை இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் போக்குவரத்து, மின்சாரம், சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன், ஆவின், பூம்புகார், கப்பல் போக்குவரத்துக் கழகம், டாஸ்மாக், சிமென்ட், சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு, வங்கிகள், மொத்த விற்பனை பண்டக சாலைகள், டான்பெட், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு நூற்பாலைகள், நியாய விலைக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு ஆலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணி புரியும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு 2013-14ம் ஆண்டிற்கான போனஸ் வழங்க வேண்டுமென கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், மின்வாரியத்தை தவிர எந்தவொரு நிறுவனத்தையும் அழைத்து நிர்வாகங்களிலோ அல்லது துறை சார்ந்த அமைச்சர்களோ போனஸ் பற்றி பேச்சுவார்த்தை நடத்திட முன்வரவில்லை. தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக போனஸ் வழங்க வேண்டும் என்பதில் அரசு அலட்சியம் காட்டுகிறது.இந்த ஆண்டு ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்ற வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதும், போனஸ் உறுதியாக கிடைக்குமா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது. 2001ல் நடந்ததை போல் மீண்டும் போனஸ் போராட்டம் தானா என்ற சந்தேகமும் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து தொழிற்சங்கங்களை அழைத்து போனஸ் கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக போனஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.