சென்னையில் இருந்து இயக்கப்படும் கோவை சதாப்தி எக்ஸ்பிரசில் எல்எச்பி பெட்டிகள்
சேலம்: சென்னை-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் பெட்டிகள் அனைத்தும் எல்எச்பி பெட்டிகளாக வரும் நவம்பர் 1ம் தேதி முதல் மாற்றப்படுகிறது.சென்னை-கோவைக்கு இடையே இருமார்க்கத்திலும் செவ்வாய்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களுக்கு சதாப்தி விரைவு ரயில் (12243, 12244) இயக்கப்பட்டு வருகிறது. 10 ஏசி பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயில், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 8 அதிநவீன எல்எச்பி(லிங்க் ஹாப்மான் புஷ்) பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி வரும் நவம்பர் 1ம் தேதி முதல் கோவை சதாப்தி விரைவு ரயில் 8 அதிநவீன எல்எச்பி பெட்டிகளுடன் இயங்குகிறது. இந்த பெட்டியில் 78 இருக்கைகள் இருக்கும். தற்போது உள்ள ஏசி பெட்டியில் 73 இருக்கைகள் உள்ளன. எல்எச்பி பெட்டியில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சம், நுண்செயலி கட்டுப்பாடு கொண்ட குளிர்சாதன வசதி உள்ளது. இதனால் வெயில் மற்றும் குளிர் காலங்களில் அதற்கேற்ப சுகமாக பயணிக்க முடியும். ரயில் விபத்துகளின் போதும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது குறைவு.
நவம்பர் 1ம் தேதி முதல் புதிய அதிநவீன எல்எச்பி. பெட்டிகளாக மாறுவதால், அன்றைய தினம் முதல் நவம்பர் 9ம் தேதி வரையில் சி9, சி10 பெட்டிகளுக்கு முன்பதிவு செய்திருக்கும் பயணிகளின் இருக்கைகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்படுகிறது. அதனால் அக்காலக்கட்டத்தில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், ரயிலில் ஏறுவதற்கு முன்பு முன்பதிவு மைய விசாரணை அலுவலரிடமோ அல்லது முன்பதிவு பட்டியலையோ பார்த்து தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.அடுத்த இரு ஆண்டுகளுக்குள் அனைத்து விரைவு ரயில்களிலும் எல்எச்பி பெட்டிகள் பொருத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் முன்னோட்டமாக சதாப்தி, துரந்தோ போன்ற விரைவு ரயில்களில் முதல் கட்டமாக எல்எச்பி பெட்டிகள் படிப்படியாக கோட்டம் வாரியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.