சூலூரில் அதிரடி சோதனை: லஞ்ச பணம் 3.13 லட்சம் சிக்கியது: பெண் சார்பதிவாளர் மீது வழக்கு
சூலூர்: சூலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில், ரூ.3.13 லட்சம் சிக்கியது. இதுதொடர்பாக பெண் சார்பதிவாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை சூலூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள் பற்றிய ரகசிய தகவலின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை சூலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். ஊழியர்கள் யாரும் எதிர்பாராத வகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அலுவலகத்தில் புகுந்து தொலைபேசி இணைப்புகள் மற்றும் இன்டர்நெட் இணைப்புகளை துண்டித்தனர். கதவு மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டது. பின்னர் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ய தொடங்கினர். இதில் கணக்கில் காட்டப்படாத முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதை தொடர்ந்து அலுவலர்களிடம் துருவி, துருவி நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது. விசாரணையில், பெண் சார்பதிவாளர் கலைச்செல்வம் கிரையச் செலவுக்கு அதிகம் பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் திடீர் சோதனையால் சூலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.