பாஜவின் மிகப்பெரிய வெற்றி தனிநபரால் ஏற்பட்டதல்ல ராஜஸ்தான் முதல்வர் மறைமுக தாக்கு
ஜெய்ப்பூர்: மக்களவை தேர்தலில் பாஜவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி எந்த ஒரு தனிநபராலும் ஏற்பட்டதல்ல என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா சூசகமாக மோடியை தாக்கிஉள்ளார்.ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் ரயில்வே மேம்பாலத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பாஜ முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கலந்து கொண்டார். அப்போது வசுந்தரா பேசுகையில்,ராஜஸ்தானில் லோக்சபா தேர்தலில் பாஜ 25க்கு 25 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது. அதே போல் மொத்தமுள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில் 163 இடங்கள் பாஜவுக்கு கிடைத்தது. இந்த மகத்தான வெற்றிக்கு தனி ஒருவர் காரணம் என யாராவது கூறினால், அவர் தனது கூற்றை மீண்டும் ஒருமுறை சிந்தித்து பார்த்துக் கொள்ள வேண்டும். மக்கள்தான் இந்த மகத்தான வெற்றியை சாத்தியமாக்கியுள்ளனர். வெற்றிக்கு அனைவருடைய கூட்டு முயற்சிதான் காரணமாகும் என்று தெரிவித்தார்.
தற்போது வசுந்தராவின் பேச்சு எதிர்கட்சிகளுக்கு மெல்ல அவல் கிடைத்த கதையாக மாறிவிட்டது. அவர் மோடி அலையை விமர்சித்துதான் இவ்வாறு பேசியுள்ளார் என்று தாக்க தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக கட்சி மேலிடத்திற்கும் வசுந்தராவுக்கும் இடையே சுமுக உறவு இல்லை என்றும் அதனால்தான் வசுந்தரா தனது அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அர்ச்சனா சர்மா கூறுகையில், சமீபத்தில் டெல்லி சென்ற வசுந்தராவை அவரது கட்சி தலைவர்களே சந்திக்க மறுத்துவிட்டனர். மாநிலத்தின் மீது மத்திய அரசு தனது அதிகாரத்தை செலுத்த முயல்வதாக வசுந்தராவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தான் மறைமுக தாக்குதல்களை அவர் தொடங்கியுள்ளார் என்று தெரிவித்தார்.