சென்னை: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் 11, 12, 18, 19 தேதிகளில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக திமுக பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த ஆண்டு 106ம் பிறந்தநாள் முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பங்கு பெறும் பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் போட்டிகள் 7ம் ஆண்டாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அக்டோபர் 11, 12 தேதிகளில் முதல் கட்டமாகவும், அக்டோபர் 18, 19 தேதிகளில் 2ம் கட்டமாகவும் முதல்நிலைப் போட்டிகள் நடைபெறும்.
பேச்சுப் போட்டிக்கான தலைப்பு: அண்ணாவின் கனவுகளும், கலைஞரின் செயல்களும், இட ஒதுக்கீடும் திராவிடப் பெருந்தலைவர்களும். 2 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 7 நிமிடத்துக்கு மிகாமல் பேச வேண்டும்.கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு: மாணவர்கள் நலனில் திமுக, காலத்தால் அழியாத கலைஞர் அரசின் சாதனைகள் ஆகிய 2 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 100 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கவிதை ஒப்பித்தல் போட்டி: இன உணர்வும் மொழிப்பற்றும் எனும் தலைப்பில் திருவள்ளுவர் தூங்கிக் கொண்டிருந்தார் என தொடங்கி சூடு எங்கே பிறந்தது, சொரணை எங்கே பிறந்தது என்று முடியும் திமுக தலைவர் கருணாநிதியின் கவிதை.
புறநானூற்றுத் தாய் 2 எனும் தலைப்பில் 1955ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி எழுதிய காவிரி தந்த தமிழகத்துப் புது மணலில் எனத் தொடங்கி திருமகளே, இந்தப் பூவுலகில் என முடியும் கவிதை ஆகிய 2 கவிதைகளில் ஏதேனும் ஒரு கவிதையை ஒப்பித்தல் வேண்டும். மாவட்ட அளவில் நடைபெறும் முதல் நிலை போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், 2ம் பரிசு ரூ. 5 ஆயிரம், 3ம் பரிசு ரூ. 2,500, ஆறுதல் பரிசு ரூ.1,000 வீதம் 10 பேருக்கு வழங்கப்படும். அந்தந்த மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் துணையோடு மாவட்ட செயலாளரின் ஒத்துழைப்போடு இப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்களது கல்வி நிலையத்தின் சான்றுகளோடு அந்தந்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களோடு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 9, 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் மட்டுமே பங்கேற்கத் தகுதியுடையவராவர்.மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்க்கு போட்டிகள் நடத்தப்பட்டு மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், 2ம் பரிசு ரூ. 15 ஆயிரம், 3ம் பரிசு ரூ.10 ஆயிரம். ஆறுதல் பரிசு ரூ. 5 ஆயிரம் வீதம் 10 பேருக்கு வழங்கப்படும்.மாநில அளவிலான இறுதிக் கட்ட போட்டிகள் அக்டோபர் 25, 26 (சனி, ஞாயிறு) தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும்.