முதல்வர் பன்னீர்செல்வம் ஆயுத பூஜை வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கை: வாழ்வுக்கு வளம் சேர்க்கக் கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாயும், செல்வத்தைத் தரும் திருமகளாயும், துணிவைத் தரும் மலைமகளாயும் விளங்கும் அன்னையை, பெண்மையை போற்றி வணங்கும் விழா நவராத்திரி திருவிழா. மக்களின் துன்பம் நீக்க எண்ணிய அன்னை ஒன்பது நாட்கள் மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டு அவனை வதம் செய்த நாள் விஜயதசமி திருநாள். ஒன்பது நாட்கள் அன்னை சக்தியை வழிபடுவதால் ‘நவராத்திரி’ என்ற சிறப்புப் பெயர் பெற்றது.
நவராத்திரி நாட்களில் தேவியர் மூவரையும் உளமார வணங்கினால் வீரம், செல்வம், கல்வி என அனைத்து நன்மைகளையும் பெறலாம். விஜயதசமி தினத்தன்று கல்வி, கலை, தொழில்கள் ஆகியவற்றை தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கும் திருநாள் விஜயதசமி திருநாள். தமிழக மக்கள் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியை போற்றி வணங்கி, அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.