இன்ச்சியான்: தென்கொரியாவில் துவங்கியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் நாளிலேயே இந்தியா தங்கப்பதக்கம் வென்று பதக்க வேட்டையைத் துவக்கி உள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜிது ராய், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவில் இன்ச்சியான் நகரில் நேற்று துவங்கியது. இந்தியா சார்பில் ஆசிய போட்டியில் பங்கேற்கும் குழுவில் ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இதனால், துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா தங்கங்களை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதை மெய்ப்பிக்கும் வகையில், துப்பாக்கி சுடுதல் பிரிவில் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்தது.
துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று அதிகாலை நடந்தது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியாவின் சுவேதா சவுத்ரி வெண்கலப்பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்த நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்ற துப்பாக்கி சுடும் வீரர்கள் உற்சாகம் குறையாமல் பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் துல்லியமாக சுடத் தொடங்கினர். ஆடவர் 50 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஜிது ராய் பங்கேற்றார். முதல் சுற்றில் 28.7 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் இருந்த ஜிது ராய், அடுத்தடுத்த சுற்றுகளில் துல்லியமாக இலக்கை நோக்கிச் சுட்டு, புள்ளிகளைக் குவித்தார். மற்ற வீரர்கள் தடுமாறிய வேளையில், ஜிது ராய் கவனம் சிதறாமல் புள்ளிகளை எடுக்கவே அவருக்கு பதக்கம் வெல்ல வாய்ப்பு உருவானது.
8வது சுற்றில் ஜிது ராய் சிறப்பாக சுட்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அவருக்கு கடும் சவாலாகத் திகழ்ந்தார் வியட்னாம் வீரர். கடைசியில், ஜிது ராய்க்கு அடுத்த வந்த வியட்நாம் வீரர் நிகுயென் 0.7 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியிருந்தார். 50 மீட்டர் பிஸ்டல் பிரிவு இறுதிப்போட்டியில் ஜிது ராயுடன், வியட்னாமின் நிகுயென் பலப்பரீட்சை நடத்தினார். 9வது மற்றும் இறுதிச்சுற்றில் ஜிது ராய் ஒவ்வொரு ஷாட்டையும் இலக்கு தவறாமல் சுட, பதற்றத்தில் நிகுயென் தவறு செய்தார். இதனால், நிகுயென்னுக்கு கடைசி ஷாட்டில் 5.8 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது.
ஜிது ராய் தனக்கு கிடைத்த இறுதி வாய்ப்பில் சிறப்பாக சுட்டு 8.4 புள்ளிகளை எடுத்தார். மொத்தத்தில் 186.2 புள்ளிகளுடன் ஜிது ராய் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றார். 183.4 புள்ளிகள் அடுத்த நிகுயென்னுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவரான ஜிது ராய், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தான் பங்கேற்ற 6 போட்டிகளிலும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தப் போட்டிகள் அனைத்திலும் தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.