திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 26ம்தேதி தொடங்கி அக்டோபர் 4ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தேவஸ்தானம் சார்பில் அனைத்து துறைகளின் சார்பில் ஏற்பாடுகள் கடந்த சில தீவிரமாக நடந்து வருகிறது. பிரதான அன்னபிரசாத கூடமான தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாதம் கூடம், வைகுண்டம் காத்திருப்பு அறைகள், ஸ்ரீவெங்கடெஸ்வரா கேண்டின், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான வரிசைகள் மற்றும் யாத்திரை சமுதாய கூடத்தில் அன்னபிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நான்கு மாட வீதிகளில் தடுப்பு வேலிகள், புதிய சாலைகள், கோலங்கள், அலங்கார வளைவுகள், மின்சாரத்துறை சார்பில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுவாமியின் உருவங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோயிலில் இறக்குமதி செய்யப்பட்ட மலர்களாலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மலர்களால் மலர் கண்காட்சி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீவாரி திட்டத்தின் மூலம் கூடுதல் சவர தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு பக்தர்கள் விரைவில் தலைமுடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.