இந்தியாவில் எங்கு ராஜபக்சே வந்தாலும் மதிமுக போராட்டம்: வைகோ பேட்டி
சென்னை: பெரியாரின் 136வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது: கடந்த 2009ல் இலங்கையில் நடந்த போரின்போது லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்சே தலைமையிலான அரசு கொன்று குவித்தது. அந்த போருக்கு பிறகு ராஜபக்சே இந்தியாவுக்கு எப்போது வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.
இதுதவிர காமன்வெல்த் போட்டி, கிரிக்கெட் போட்டி, மோடியின் பதவியேற்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்ட போதும் அந்த இடத்திற்கே சென்று மதிமுக போராட்டம் நடத்தியது. இந்தியாவில் எந்த பகுதிக்கு ராஜபக்சே வந்தாலும் மதிமுக தொடர்ந்து போராட்டம் நடத்தும். இவ்வாறு வைகோ கூறினார்.இந்நிகழ்ச்சியில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, அவை தலைவர் திருப்பூர் துரைசாமி, மாவட்ட தலைவர்கள் ஜீவன், ஜோயல், மகளிர் அணி செயலாளர் குமாரி விஜயகுமார், செய்தி தொடர்பாளர் நன்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.