ஐ படத்துடன் அர்னால்டு கனெக்ஷன் விக்ரம் தகவல்
சென்னை: தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு.‘அந்நியன் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘ஐ. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ சிடி வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. ரஜினிகாந்த் ஆடியோவை வெளியிட கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றார். இதில் ரஜினி பேசும்போது,‘பாடல் வெளியீட்டு விழாவை பார்த் தால் படத்தின் வெள்ளிவிழாபோல் உள்ளது. ‘ஐ’ படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் ஷங்கர் பிரமாண்டமாக எடுக்க முடியும். ஹாலிவுட் தரத்துக்கு இந்திய படத்தை ஷங்கரால் கொண்டு செலல முடியும் என்றார்.
விழாவில் பேசிய அர்னால்டு கூறும்போது, ‘இந்தியா அழகான நாடு. இந்தியாவுக்கு ஏற்கனவே நான் வந்திருக்கிறேன். சென்னைக்கு வருவது இதுதான் முதல்முறை. ‘ஐ‘ போன்ற படங்களை பார்க்கும்போது இந்திய படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது. குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார். விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடந்தது. ‘அர்னால்டு படங்களைப் பார்த்துதான் ஐ படத்தின் பாணி உருவானது. அவரது உடற்பயிற்சி புத்தகங்களை படித்து இப்படத்துக்காக எனது உடற்கட்டை வடிவமைத்துக்கொண்டேன் என்றார் விக்ரம்.