சென்னை: வயிற்று வலியால் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மனநலம் பாதித்த பெண்ணின் வயிற்றில் அரை கிலோ இரும்பு பொருட்கள் இருந்தன. அவற்றை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர்.சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் லட்சுமி (35). 15 ஆண்டுகளுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் வேலையிலிருந்தும் அவரை நீக்கியதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இரும்பு ஆணி, இரும்பு செயின், சிறு ஸ்க்ரூக்கள், பாசிமாலை, குண்டூசி, கொண்டை ஊசி, கோட்டு பட்டன் என கையில் கிடைத்ததையெல்லாம் விழுங்கியுள்ளார்.இவையெல்லாம் இவரது வயிற்றில் இரைப்பையில் தேங்கியுள்ளது. இதனால் வயிறு வீங்கி மலத்துடன் ரத்தம் வெளியேற ஆரம்பித்தது. யாரோ சூனியம் வைத்துவிட்டதாக கூறி உறவினர்கள் கோயில்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். மாந்தரீகர்களிடம் ஏராளமான பணம் செலவழித்துள்ளனர். பின்னர் மனநல மருத்துவர்களையும் பார்த்துள்ளார்.
இதனிடையே வயிறு, கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டதால் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லட்சுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரைப்பை குடலியல் மருத்துவ துறை மருத்துவர்கள் பல சோதனைகள் நடத்தினர். எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவரது இரைப்பையில் அரை கிலோ எடையுள்ள இரும்பு பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்த டாக்டர்கள் கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து லட்சுமி குடலில் உள்ள அரை கிலோ எடையுள்ள இரும்பு ஆணி, செயின், குண்டூசி உள்பட 152 வகையான பொருட்களை எடுத்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் இப்போது மனநலம் தேறி பூரண குணமடைந்து நன்றாக பேசுகிறார்.இது பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டீன் விமலா மற்றும் துறை மருத்துவர்கள் இரைப்பை குடலியல் துறை மருத்துவர்கள் கடந்த 5ஆண்டுகளில் இதுபோல் 64 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றி உள்ளதாக தெரிவித்தனர்.