அறுபடை வீட்டில் இந்த தல முருக பெருமான் மிகவும் அருள் வாய்ந்தவர். அதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் ஆகியன வேண்டி இங்கு படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல், பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தன காப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனை ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்தி கடனாகும்.
மாசி பெருந்திருவிழாவில் வள்ளி கல்யாணமும், சித்திரை பெருந்திருவிழாவில் தெய்வானை உற்சவமும் நடைபெறும். இரு திருவிழாக்களும் தலா 10 நாட்கள் நடைபெறும். இதில் ஆயிரக்கணகாண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆடி கிருத்திகை திருவிழாவில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் காவடி எடுப்பார்கள். இத்தல முருகன் குறித்து தமிழ் பாடல் பாடிய அருணகிரி நாதர், திருப்புகழிலும் நக்கீரர் திருமுருகாற்று படையிலும் நிறைய பாடல்களை பாடியுள்ளார். இது தவிர ராமலிங்க அடிகளாரும் பாடியுள்ளார்.