கமல் படத்துக்கு தடை? ரகளை செய்கிறார் பெண் தயாரிப்பாளர்
மும்பை: பாலிவுட் பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் புது பிரச்சினை கிளப்பி இருப்பதால் கமல்ஹாசன் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.மலையாளத்தில் ஆல்டைம் ஹிட் படமாக அமைந்தது மோகன் லால் நடித்த திரிஷ்யம். இந்த படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் ஆகிறது. தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்கிறார். மலையாள தரிஷ்யம் பட டைரக்டர் ஜீது ஜோசப் இதை இயக்குகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் நம்பர் ஒன் தயாரிப்பாளராக இருக்கும் ஏக்தா கபூர், புது பிரச்னையை கிளப்பி உள்ளார். பாலிவுட் ஹீரோ ஜிதேந்திராவின் மகள் இவர். ஜப்பானிய எழுத்தாளர் கீகோ ஹிகாஷினோ எழுதிய தி டிவோசன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற நாவலை படமாக்கும் உரிமையை ஏக்தா வாங்கியுள்ளார்.
இந்த நாவலில் இடம்பெற்ற பல சம்பவங்கள், திரிஷ்யம் படத்தில் காட்சிகளாக வந்துள்ளதாம். சமீபத்தில் திரிஷ்யம் படத்தை பார்த்து அதிர்ந்துபோனாராம் ஏக்தா. உடனே திரிஷ்யம் மலையாள பட தயாரிப்பாளருக்கும் டைரக்டர் ஜீது ஜோசப்புக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டார். அத்துடன் நிற்கவில்லை. திரிஷ்யம் படத்தை வேறு எந்த மொழியிலும் ரிலீசாகவிட மாட்டேன் என சபதம் போட்டிருக்கிறார். நான் உருவாக்கும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இன்னொரு படத்தில் திருட்டுத்தனமாக இடம்பெறுவதை அனுமதிக்க மாட்டேன்என கோபம் கொப்பளிக்க சொல்லியிருக்கிறார் ஏக்தா. கமல்ஹாசன் நடிக்கும் திரிஷ்யம் ரீமேக் உள்பட மற்ற மொழியில் உருவாகும் இதன் ரீமேக்குகளையும் தடை செய்ய கோர்ட்டில் வழக்கு தொடுக்க ஏக்தா முடிவு செய்துள்ளாராம்.