வாஷிங்டன்:அப்பாவி பொதுமக்கள் பலியாவதால் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தி உள்ளார்.பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேலின் எல்லை பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவம் காசா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. கடந்த 9 நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு காசா நகரில் உள்ள ஹமாஸ் இயக்கத் தலைவர்கள் வீடுகளை குறி வைத்து ராக்கெட்கள் வீசப்பட்டன. இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தி உள்ளார். ‘அப்பாவி மக்கள் பலியாவதால், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிட வேண்டும். அதுபோல, மக்களை கேடயமாக பயன்படுத்துவதை ஹமாஸ் தீவிரவாதிகள் நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, எல்லையில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வசதியாக 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்கிறோம் என்று இஸ்ரேல் ராணுவம் நேற்றிரவு அறிவித்தது. இஸ்ரேலின் 5 மணி நேர போர் நிறுத்தத்தை தொடர்ந்து, பாலஸ்தீனத்தில் காசா துறைமுக பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வெளியேறினர். இதற்கிடையில், இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை குறிவைத்து வான்வழி மற்றும் ராக்கெட் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.