போர்டலிசா: பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் வளர்ச்சிக்காக புதிதாக பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவக்கப்படும் என்றும், சீனாவின் ஷாங்காய் நகரில் இதன் தலைமை அலுவலகம் அமையும் என்றும் கூட்டமைப்பு மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. வங்கியின் முதல் தலைவராக இந்தியர் தேர்வு செய்யப்பட உள்ளார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற கூட்டமைப்பை நடத்தி வருகின்றன. இந்த கூட்டமைப்பின் மாநாடு பிரேசில் நாட்டில் போர்டலிசா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடின், பிரேசில் அதிபர் தில்மா ரவுசப், சீன அதிபர் ஜின்பிங், தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் கலந்து கொண்டனர். உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்றவை உலக நாடுகளுக்கு கடன் வழங்கி வந்தாலும், அவற்றில் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால், உலக வங்கி போல் பிரிக்ஸ் நாடுகளுக்கென தனி வங்கியை ஏற்படுத்துவது பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில், பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியை அமைக்க இறுதி முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம், சீனாவில் ஷாங்காய் நகரில் அமைக்கப்படும். இதன் முதல் தலைவராக இந்தியர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். மொத்தம் 100 பில்லியன் டாலர்(சுமார் ரூ.6 லட்சம் கோடி) முதலீட்டில் இந்த வங்கி துவக்கப்படும். இதில் சீனா 41 பில்லியன் டாலர், பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் தலா 18 பில்லியன் டாலர், தென் ஆப்ரிக்கா 5 பில்லியன் டாலர் என முதலீடு செய்யலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. முன்னதாக, வங்கியின் பங்குகளை பிரிப்பதில் 5 நாட்டு தலைவர்களுக்கு இடையிலும் நீண்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா தரப்பில், அனைத்து நாடுகளுக்கும் சம அளவில் பங்குகளை ஒதுக்க வலியுறுத்தப்பட்டது. வங்கி துவங்குவது பற்றிய அறிவிப்பு வெளியானதும், பிரதமர் மோடி கூறுகையில், ‘பிரிக்ஸ் வங்கி அமைப்பது ஒரு முக்கியமான நடவடிக்கை. கடந்த 2012ல் டெல்லியில் முதன்முதலில் இதற்கான பேச்சுவார்த்தை துவங்கியது. இன்று அது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம்’ என்றார்.