பெண்ணிடம் செயின் அபேஸ் சென்னையில் பைக் ஆசாமிகள் அட்டூழியம்
சென்னை: சென்னையில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேப்பேரி, எழும்பூர், திருமங்கலத்தை தொடர்ந்து நேற்று இரவு அண்ணா சதுக்கத்திலும் பெண் ஒருவரின் செயினை பைக் ஆசாமி பறித்து சென்றுள்ளார்.புரசைவாக்கம் ரயில்வே அதிகாரி குடியிருப்பில் வசிப்பவர் மகேஸ்வரி (47).இவர் வாக்கிங் சென்றபோது, பைக்கில் வந்த ஹெல்மெட் ஆசாமி ஒருவர் மகேஸ்வரி கழுத்தில் கிடந்த செயினை பறித்து சென்றார்.இதைத் தொடர்ந்து கொளத்தூரை சேர்ந்த சத்யபிரியா (35) விருகம்பாக்கத்தை சேர்ந்த விஜயலட்சுமி ஆகியோரிடம் பைக் ஆசாமிகள் செயினை பறித்து சென்றனர். அதேபோல், திருமங்கலம் தபால் தந்தி காலனியை சேர்ந்த செல்வி என்பவர் திருமங்கலம் காவல் நிலையம் அருகே சென்றபோது பைக் ஆசாமிகள் அவரின் செயினை பறித்து சென்றனர்.
இந்த வழக்குகளில் குற்றவாளிகள் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், அண்ணா சதுக்கம் சுங்குவார் தெருவை சேர்ந்த ஜெயந்தி (48)என்ற பெண் நேற்று இரவு 9.30 மணி அளவில் தனது வீட்டு முன் உள்ள பெட்டிக்கடைக்கு சென்றார். அங்கு தயாராக நின்றுகொண்டு இருந்த பைக் ஆசாமி அவர் கழுத்தில் கிடந்த செயினை பறித்து ஓட்டம் பிடித்தார். இது குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் தொடர்ந்து நடந்து வரும் இதுபோன்று செயின் பறிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.