இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நாட்டிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்தப்போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லார்ட்ஸ் மைதான ஆடுகளம் காலை நேரத்தில் பசுமையாகத் தென்படும் என்பதால் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். நேரம் செல்லச் செல்ல பசுமை மறைந்து சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் மாறிவிடும் என்பதால், இந்திய அணிக்கு 2வது டெஸ்ட் போட்டியிலும் சிரமம் ஏதும் இருக்காது என்று கூறப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டி யில் பேட்டிங்கில் கலக்கிய ஆல் ரவுண்டர் பின்னிக்கு இந்தப் போட் டியில் பந்துவீச்சில் போதிய வாய்ப்பளிக்க கேப்டன் டோனி முடிவு செய்துள்ளார். இதனால், வேகப் பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, புவனேஸ் வர் குமார், ஷம்மி ஆகியோருடன் பின்னி, ஜடேஜா ஆகியோர் பந்துவீச்சில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது. இதனால், இந்த டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் சேர்க்கப்பட மாட்டார் என்று கூறப்படுகிறது.இந்திய வீரர்கள் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
துவக்க பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான், முரளி விஜய், செத்தேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, அஜின்க்ய ரகானே ஆகியோர் பேட் டிங் பயிற்சி செய்தனர். பீல் டிங் பயிற்சியாளர் டிரெவர் பென்னியுடன் இணைந்து கேட்ச் பிடிக்கும் பயிற்சியில் தீவிரம் காட்டினார் கோஹ்லி. இங்கிலாந்து அணி லார்ட்ஸ் டெஸ்ட் போட் டியில் இடது கை சுழல் பந்து வீச்சாளர் சிமோன் கெரிகானை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. பகுதி நேர ஸ்பின்னரான அலி யுடன் கெரிகானும் சுழற்பந்து தாக்குதலில் இறங்கினால், இந்திய அணியைத் திணற அடிக்க முடியும் என்று கருதுகிறார் இங்கி லாந்து கேப்டன் அலிஸ்டர் குக். இதனால், இங்கிலாந்து அணியில் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.ஆண்டர்சனுக்கு சிக்கல்
நாட்டிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில், இந்திய பேட்ஸ்மேன்கள் மதிய உணவு இடைவேளைக்காக களத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை தள்ளிவிட்டதுடன், திட்டியதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது இந்திய அணி நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் புகார் செய்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விரைவில் விசாரணை நடத்த உள்ளது. இந்த புகார் நிரூபிக்கப்பட்டால், ஆண்டர்சனுக்கு 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகள் வரை விளையாட தடை விதிக்கப்படலாம். இந்நிலையில், ஆண்டர்சன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இந்திய வீரர் ஜடேஜா மீது புகார் செய்ய முடிவு செய்துள்ளது.