‘சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா’ மகேஷ்பாபுவுடன் சமந்தா திடீர் சமரசம்
சென்னை: ஹீரோவுடன் மோதிய சமந்தா திடீர் சமரசம் ஆனார்.கடந்த மாதம் டோலிவுட்டில் மகேஷ் பாபு நடித்த ‘நேனோக்கடய்னே பட போஸ்டரில் ஹீரோ நடந்து செல்ல அவரை பின்தொடர்ந்து நாய் பாணியில் ஹீரோயின் மண்டியிட்டு நடந்து செல்வதுபோன்ற காட்சி அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த சமந்தா கொதிப்படைந்தார். பெண்களை இழிவுபடுத்துவதுபோல் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இது அப்பட ஹீரோ மகேஷ்பாபுவை கோபப்படுத்தியதுடன் அவரது ரசிகர்களும் கோபம் அடைந்தனர். சமந்தாவுக்கு எதிராக இணைய தளத்தில் கருத்துக்கள் வெளியிட்டனர்.
இந்த மோதலில் சமந்தாவுக்கு ஆதரவாக நடிகர் சித்தார்த்தும் கருத்து தெரிவித்தார்.இந்நிலையில் ‘அஞ்சான்‘ படத்தின் ஸ்டில் ஒன்றில் சமந்தா கவர்ச்சி உடை அணிந்து கடற்கரையில் ஒய்யாரமாக சாய்ந்திருக்க அவரது அருகில் சூர்யா அமர்ந்து ரசிப்பதுபோன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு மகேஷ்பாபு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘இப்போது மட்டும் பெண்களை அவமானப்படுத்துவதுபோல் இக்காட்சி இல்லையா? என்று கேட்டனர்.
இந்த மோதல் நீருபூத்த நெருப்பாக தகித்துக்கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன் சினிமா பட விழா ஒன்றில் மகேஷ்பாபு-சமந்தா நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவரும் அருகருகே அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்ததுடன் விரல்களால் வாயை மூடியபடி மகேஷ்பாபுவிடம் ரகசியமாக பேசியபடி இருந்தார் சமந்தா. இந்த காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்பட வைத்தது. அருகில் இருந்த ஒருவர் கவுண்டமணி பாணியில் ‘சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா என்று கமென்ட் அடிக்க சுற்றி இருந்தவர்கள் சிரித்துக்கொண்டார்கள்.