காரப்பாக்கத்தில் தீ விபத்து: 3 குடிசைகள் சாம்பல்
துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் அடுத்த காரப்பாக்கம் வேண்டராசி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் தர்மன் (40). வீட்டையொட்டி 3 குடிசைகள் அமைத்துள்ளார். இதில் 2 குடிசைகளை வாடகைக்கு விட்டுள்ளார். இங்கு வெளிமாநில வாலிபர்கள் 6 பேர் தங்கி கட்டுமான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு குடிசையில் பழைய பொருட்களை போட்டு வைத்திருந்தார்.நேற்று நள்ளிரவு அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். திடீரென பழைய பொருட்கள் போட்டு வைத்திருந்த குடிசையில் தீப்பிடித்தது. இதை பார்த்ததும் மற்ற குடிசைகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவல் அறிந்து சிறுசேரி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில் 3 குடிசைகள் மற்றும் இதன் அருகே நிறுத்தி இருந்த ஆட்டோ, பைக் எரிந்தது.