சேலம்: சேலத்தில் நேற்றிரவு பருப்பு கடை ஊழியரின் முகத்தில் மிளகாய்ப்பொடியை தூவி ரூ.15 லட்சத்தை வழிப்பறி செய்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (50). பருப்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு பருப்பு விற்பனை செய்து வருகிறார். அதற்கான பணத்தை, அவரது கடை யில் கேஷியராக பணி புரிந்து வரும் முருகேசன் (35) வசூலித்துக் கொண்டு வருவது வழக்கம். நேற்று கோவை, பொள்ளாச்சியில் பருப்பு விற்றதில் வசூலான பணம் ரூ.15 லட்சத்து 23 ஆயிரத்துடன், முருகேசன் பஸ்சில் சேலம் திரும்பினார். நேற்றிரவு 8.30 மணியளவில் சேலம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த அவர், அங்குள்ள சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த தனது பைக்கை எடுத்துக்கொண்டு வந்தார். பின்னர், தான் கொண்டு வந்த பணப்பையை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது வைத்தபடி, செவ்வாய்ப்பேட்டைக்கு திரும்பினார்.
சேலம் 3 ரோடு வழியாக லீபஜார் ரயில்வே கேட் அருகே சென்ற போது, திடீரென மற்றொரு பைக்கில் வந்த இருவர், அவரது முகத்தில் மிளகாய்ப்பொடியை வீசியதோடு, அவரை தாக்கினர். இதில் நிலைகுலைந்த அவரிடம் இருந்து, பணப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பியோடினர். இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசன், அலறியபடி அவர்களை பைக்கில் துரத்தினார். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர். இது குறித்து உடனடியாக பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கடை உரிமையாளர் ராமச்சந்திரன் புகார் செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. பணத்தை பறிகொடுத்த முருகேசன், பைக்கில் வந்தவர்கள் தனது முகத்தில் மிளகாய்ப்பொடியை வீசியதாக கூறியுள்ளார். ஆனால் அவர் வந்த பைக் மீது மிளகாய்ப்பொடி எதுவும் இல்லை. இதனால் போலீசாருக்கு அவர் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.