ஆலங்குடி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதிகளில் உள்ள கிராமங்களில் மொய் விருந்து வழக்கம் தோன்றியது. வறுமையில் வாடும் குடும்பங்கள், திருமணம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளை நடத்தமுடியாதவர்கள் இதுபோல் மொய் விருந்து நடத்தி மொய்யாக வசூலாகும் பணத்தில் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை நடத்திவந்தனர். இது நாளடைவில் வசதி படைத்தவர்களும் மொய்விருந்து நடத்தும் வழக்கமாக மாறி விட்டது.இந்த வழக்கம் படிப்படியாக புதுக்கோட்டை கிழக்கு பகுதியான ஆலங்குடி பகுதிக்கும் பரவியது.
ஆலங்குடி, கீரமங்கலம், அணவயல், மாங்காடு, வடகாடு, கீழாத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஆனி, ஆடி மாதங்களில் மொய்விருந்து நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் நிறைய மொய் விருந்துகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சிகளுக்காக உறவினர் களையும் நண்பர்களையும் வரவேற்று ஏராளமான டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த போர்டுகள் நிகழ்ச்சி நடத்துபவர்களின் வசதி வாய்ப்புகளுக்கேற்பவும் நண்பர்களின் ஆர்வத்திற்கேற்பவும் பெரியதும் சிறியதுமான போர்டுகளை தயாரித்து சாலையோரங்களிலும், மண்டபங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வைப்பது வழக்கம்.
ஆடி மாதம் நடை பெற இருக்கும் நிகழ்ச்சிகளுக்கு இப்போதே போர்டுகளைத் வைத்துள்ளனர்.இதனால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக உள்ளது என காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்றதால் வட காடு போலீசாரின் உத்தரவின் பேரில் புளிச்சங்காடு கைகாட்டிப் பகுதியில் இருந்த டிஜிட்டல் போர்டுகள் அகற்றப்பட்டன. நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி எப்போது நிகழ்ச்சி நடத்துகிறார்களோ அதற்கு முதல் நாளும், நிகழ்ச்சி நடைபெறும் நாளிலும் அதன் பிறகு ஒரு நாள் மட்டும் டிஜிட்டல் போர்டு வைத்துக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.