பவானி: ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஆப்பக்கூடல் காமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் பொம்முசாமி (36). பவானி சங்கமேஸ்வரர் கோயிலில், தாமரைப் பூக்களை விற்பனை செய்து வரும் இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு குளத்தில் வெண்தாமரைகளை சேகரித்து கொண்டு வந்தார். விற்பனைக்கு தரம் பிரித்தபோது ஒரே தண்டில் இரு தாமரைகள் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார். ஈரோடு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் குணசேகரன் கூறும்போது, தாமரை ஒரு காம்பில் ஒரு பூ மட்டுமே பூக்கும். இரண்டு பூக்கள் என்பது அரிதானது. ஒரு லட்சத்தில் ஒரு பூ இவ்வாறு பூக்கலாம். ஒரு பிரசவத்தில் எப்படி இரட்டை குழந்தைகள் ஒட்டிப் பிறக்கிறதோ அவ்வாறான அபூர்வமான நிகழ்வாகும் என்றார்.