இதய வால்வு மாற்று நவீன அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை
சென்னை: வேலூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் (37) உயிருக்கு ஆபத்தான நிலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இதயத்திற்குள் ரத்தத்தை பிரிக்கும் வால்வு பழுதடைந்திருந்தது. இதய உட் சுவர் துளை ஏற்பட்டதன் காரணமாக அசுத்த ரத்தமும் நல்ல ரத்தமும் கலக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் நோயாளி உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். உடனடியாக அவரை பரிசோதித்த இதய சிகிச்சை நிபுணர் பேராசிரியர் மாரியப்பன் தலைமையிலான மருத்துவர்கள் குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தது.
இதயத்திற்குள் பொருத்துவதற்கான பல்மோனரி வால்வை வரவழைத்து வெங்கடேசனுக்கு சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்கள் மாரியப்பன், அஜய் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவர்கள் குழு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வால்வை பொருத்தினர். தற்போது வெங்கடேசன் நலமாக இருக்கிறார். இது உலகில் மிகவும் அரிதாக செய்யப்படும் அறுவை சிகிச்சை. மேலும் இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்ய ரூ.4 லட்சம் வரை செலவாகும் என இதய சிகிச்சை நிபுணர் பேராசிரியர் மாரியப்பன் தெரிவித்தார்.