ராமநாதபுரம்: ராமநாதபுரம், கேணிக்கரை போலீஸ் எஸ்.ஐ. ஜெயபாலன். இவர் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடியை சேர்ந்தவர் டேவிட்(29). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் ஓம் சக்தி நகரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கவுரவக் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் கூலிப்படையாக செயல்பட்ட டேவிட் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் கஞ்சா விற்பனை செய்ததாக நேற்று முன்தினம் கேணிக்கரை போலீசாரால் டேவிட் கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அதில், ஒரு கைத்துப்பாக்கியின் படம் இருந்தது.
விசாரணையில், அது கேணிக்கரை எஸ்.ஐ. ஜெயபாலனின் கைத்துப்பாக்கி என்றும், அதனை விற்கச் சொல்லி தன்னிடம் காட்டினார் என்றும் டேவிட் தெரிவித்தார். தற்போது அது ஜெயபாலனின் வீட்டில் தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.இதையடுத்து நேற்று இரவு ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் பாரதி நகரில் உள்ள ஜெயபாலனின் வீட்டிற்கு சென்றனர். அங்கு நடத்திய தீவிர சோதனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி சிக்கியது. 9 எம்எம் வகையை சேர்ந்த அந்த கைத்துப்பாக்கி இந்திய தயாரிப்பா அல்லது வெளிநாட்டு தயாரிப்பா என்றும், அது எங்கு வாங்கப்பட்டது, என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜெயபாலனை பஜார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.