விடுதி பெண்களுக்கு பாலியல் தொல்லை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசாரிடம் விசாரணை
சென்னை: விருகம்பாக்கம், அபிராமி நகரில் ஆதரவற்ற முதியோர்களை பராமரிக்கும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உள்ளேயே தங்கும் விடுதியும் உள்ளது. இங்கு, 20 பெண்கள் தங்கியிருந்து முதியோர்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் ராஜா, போலீஸ் குமரேசன் இருவரும் கடந்த 3ம் தேதி இரவு போதையில் விடுதிக்குள் சென்றனர். அங்கு, ‘விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றி விசாரிக்க வந்துள்ளோம் என்று கூறி ரகளையில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த இளம் பெண்கள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இது பற்றி தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர் ஆஷா, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து புகாருக்குள்ளான போலீசார் இருவரையும் கமிஷனர் ஜார்ஜ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். இதைத் தொடர்ந்து வடபழனி உதவி கமிஷனர் சுப்புராஜன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக ராஜா, குமரேசன் இருவருக்கும் வழங்க மெமோ தரப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து இருவரிடமும் நேரடி விசாரணை நடைபெறும். இதில், குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் கைது செய்யப்படுவார்கள். தொடர்ந்து துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.