மின்சாரம் தாக்கி: புதுப்பெண், மைத்துனர் பலி மாமியார் படுகாயம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி புதுப்பெண், அவரது மைத்துனர் பலியானார்கள். மாமியார் காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். திருவள்ளூர் அடுத்த ஆயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (25). இவரது மனைவி ராஜேஸ்வரி (21). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதம் ஆகிறது. மகேஷ் தந்தை பாளையம், தாய் நாகம்மாள், தம்பி தேவேந்திரன் (23) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்தார். இன்று காலை ராஜேஸ்வரி துணி துவைத்தார். அவற்றை வெளியில் கம்பியில் காயப் போட்டார். அந்த கம்பியில் மின்சார ஒயர் அறுந்து கிடந்தது. ஈர துணிகளை போட்ட ராஜேஸ்வரியை மின்சாரம் தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு மைத்துனர் தேவேந்திரன், மாமியார் நாகம்மாள் (50) ஆகியோர் காப்பாற்ற சென்றனர். அவர்களையும் மின்சாரம் தாக்கியது. இதில் ராஜேஸ்வரி, தேவேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாகம்மாள் காயமடைந்தார். அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.