சேலம்: சேலத்தில் நள்ளிரவில் வாகன சோதனையின் போது சிக்கிய சந்தன கட்டைகளில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 28 கிலோ சந்தன கட்டைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பொன்னம்மாப்பேட்டை கேட் பகுதியில் நேற்று நள்ளிரவு அம்மாப்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் சந்தன கட்டை கடத்தி வந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் திருப்பத்தூரைச் சேர்ந்த பார்த்தசாரதி(26), சக்தி(22), குஜராத்தை சேர்ந்த சேட்டன் (26) என தெரிந்தது. திருப்பத்தூரில் உள்ள சந்தன குடோனில் சந்தன கட்டைகளை ஏலத்தில் எடுத்தாக தெரிவித்தனர்.
இதுகுறித்து குறித்து விசாரித்தபோது, அந்த சந்தன கட்டைகள் ஏலத்தில் எடுத்தவை அல்ல என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், 3 பேருடன், சந்தன கட்டை, கார் ஆகியவற்றை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள், சிக்கியவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கடந்த ஒரு மாதமாக சேலத்தில் தங்கியிருந்து திருட்டுத்தனமாக 174 கிலோ சந்தனக்கட்டைகளை வாங்கியது தெரியவந்தது.இதற்கிடையே, அம்மாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வனத்துறையிடம் 60 சந்தனக் கட்டைகள் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சிக்கியவர்கள், 64 சந்தன கட்டை கொண்டு வந்ததாக வனத்துறையிடம் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 4 சந்தன கட்டை எங்கு மாயமாகி உள்ளது என்பது குறித்து வனத்துறையினருக்கு தெரியவில்லை. மாயமான சந்தன கட்டைகள் 28 கிலோ எடை கொண்டவை. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம். இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.