உளவுத்துறை ரகசிய அறிக்கை ஊடகங்களில் கசிந்த விவகாரம் டெல்லி போலீஸ் விசாரிக்க உத்தரவு
புதுடெல்லி: என்ஜிஒக்கள் செயல்பாடு குறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு உளவுத்துறை அனுப்பிய ரகசிய அறிக்கை ஊடகங்களில் கசிந்தது தொடர்பாக டெல்லி போலீஸ் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் அணுசக்தி உலைகள் அமைக்க பல்வேறு தன்னார்வ அமைப்புகள், என்ஜிஒ எனப்படும் அரசு சாரா அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதே போல் அணைகள் அமைக்க, மலைப்பகுதிகளில் சுரங்கம் அமைக்கவும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய போராட்டங்கள் காரணமாக பல்வேறு முக்கிய திட்டங்கள் இது போன்ற போராட்டங்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வருவதாகவும் பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. பல்வேறு அரசு சாரா அமைப்புகள் வெளிநாட்டு நிதியில் தான் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பு ஏற்றுக் கொண்டதும், என்ஜிஒக்கள் செயல்பாடு குறித்து உளவுத்துறை சார்பாக ரகசிய அறிக்கை அனுப்பப்பட்டது.
இந்த அறிக்கையின் நகல் உள்துறை அமைச்சகத்துக்கும், நிதி அமைச்சகத்துக்கும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் மறுநாளே ஊடகங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உளவுத்துறை அறிக்கைக்கு கிரின்பீஸ் போன்ற என்ஜிஒ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஜனநாயக உரிமைகளை நசுக்க முயற்சிக்கும் அரசின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாக கருத்து தெரிவித்தது. இந்நிலையில் உளவுத்துறையின் ரகசிய அறிக்கை ஊடகங்களில் கசிந்தது குறித்து விசாரணை நடத்த டெல்லி போலீசுக்கு உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. டெல்லி போலீஸ் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.