காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு, நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் எனப்படும் தேசிய அடையாள அட்டை தரும் திட்டத்தை கொண்டு வந்தது. தற்போது, இந்த ஆதார் அட்டை பெரும்பாலான மாநிலங்களில் முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சமையல் எரிவாயு மானியம் உள்பட எல்லா மானிய உதவிகளும் இனிமேல் இந்த ஆதார் அடையாள அட்டையின் அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும், இதற்காக ஒரு தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் காங்கிரஸ் அரசு அறிவித்தது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆதார் முறையாக வழங்கப்படவில்லை. இதனால், தற்போது மானிய விலையில் சமையல் எரிவாயு வாங்கிக் கொண்டிருக்கும் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தேர்தலில் இந்த பாதிப்பு எதிரொலிக்கும் என்று காங்கிரஸ் அரசு பயந்திருந்த நிலையில், உச்சநீதிமன்றமும் அதற்கு தடை விதித்தது. ஆதார் அட்டைகளை அனைத்து குடிமக்களுக்கும் முறையாக வழங்கிய பின்பே இதனடிப்படையில் வங்கியில் நேரடியாக மானியம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால், காங்கிரஸ் அரசு நேரடி மானிய உதவி திட்டத்தை நிறுத்தி வைத்தது. பிரதமர் மோடி தலைமையில் புதிய மத்திய அரசு அமைந்ததும், ஆதார் அடையாள அட்டை திட்டமே நிறுத்தப்படும் என்றும், புதிதாக தேசிய அடையாள அட்டை திட்டம் கொண்டு வரப்படும் என்றும் செய்திகள் வெளியாயின.
ஆனால், மோடி கடந்த வாரம், ஆதார் அடையாள அட்டை தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்திய போது, இந்த திட்டத்தை தொடர அனுமதியளித்து விட்டார். மேலும், தற்போது 60 கோடி பேருக்கு ஆதார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதை 100 கோடி பேருக்கு விரைவில் வழங்க இலக்கு நிர்ணயித்தும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஆதார் அட்டை முறையாக வழங்கப்படவில்லை. ஏராளமானோர் இந்த அட்டையை பெறாமல் உள்ளனர். மேலும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும் முறையாக தரப்படவில்லை. இடையிடையே குப்பைத் தொட்டிகளில் மொத்தமாக ஆதார் அட்டைகள் வீசப்பட்டிருந்த காட்சிகளும் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன.இந்த சூழ்நிலையில், எல்லோருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணியை இன்னும் எளிமைப்படுத்த வேண்டும். மக்கள் எப்போது போனாலும் தங்களின் முகவரிக்கான அடையாளத்தை அளித்தாலே ஆதார் பெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இத்திட்டம் முழு வெற்றியடையும்.