திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதி லேப்பாச்சி சாலை சந்திப்பு அருகே ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன வரிசை அருகே சுமார் 40 ஆண்டு பழமை வாய்ந்த 60 அடி உயர தைல மரம் இருந்தது. இந்த மரம் நேற்று மதியம் திடீரென வேரோடு சாய்ந்து வரிசையில் காத்திருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் திருமலையை சேர்ந்த ஜீப் டிரைவர் மதுசூதன் (30) என்பவர் பரிதாபமாக இறந்தார். சஞ்சய் (40), பிரசன்ன ஆஞ்சநேயலு(21), அனில்(21), அதர்வா (7), சுரேகா(59), சீனிவாசலு (37), மோகன்ராவ் (40), கேத்தகி (34) ஆகிய 8 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 8 பேரையும் மீட்டு திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் தலையில் பலத்த காயமடைந்த மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தை சேர்ந்த அதர்வா, சுரேகா, கேத்தகி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருப்பதி சிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான இணை செயல்அலுவலர் சீனிவாசராஜு சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.