ராயபுரம் தனியார் பள்ளியில் 30 மாணவிகளுக்கு வாந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தண்டையார்பேட்டை: ராயபுரம் தனியார் பள்ளியில் 30 மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை ராயபுரம் அரதூண் சாலையில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் 100 மாணவிகள், பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். இந்நிலையில் விடுதி மாணவிகளில் சிலருக்கு நேற்று மாலை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், வாந்தி பேதி ஏற்பட்ட சுமார் 30 மாணவிகளை தண்டையார்பேட்டையில் உள்ள காலரா தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சம்பவம் குறித்து ராயபுரம் போலீசார் வழக்கு பதிந்து வயிற்று போக்குக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது, பள்ளியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி சரியாக சுத்தம் செய்யப்படாததால் குடிநீரில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.