உரிமம் இன்றி இயங்கிய காப்பகம் : வாலாஜாபாத்தில் நிர்வாகிகள் கைது
வாலாஜாபாத்: வாலாஜாபாத் மாராட்டிய கசாயகார தெருவில் வசிப்பவர் ராஜா (37). மறைமலைநகரை சேர்ந்தவர் மலர்கொடி (35). இருவரும் கடந்த 3 மாதமாக வாலாஜாபாத்தில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தனர். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 6 வயது முதல் 14 வயது வரையுள்ள 25 குழந்தைகள் தங்கி அருகேயுள்ள பள்ளிகளில் படித்து வந்தனர்.இந்நிலையில் இந்த காப்பகம் முறையான உரிமம் இன்றி நடத்தப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல அலுவலர் சற்குணத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து காப்பகத்துக்கு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முறையான உரிமம் இன்றியும், அடிப்படை வசதியின்றி காப்பகம் நடத்தப்பட்டு வந்ததும் தெரிந்தது.இதையடுத்து செங்கல்பட்டு குழந்தைகள் நலச்சங்க குழு உறுப்பினர் ஜாகிருதீன் முகமதுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர், 25 குழந்தைகளையும் வாலாஜாபாத் அடுத்த ஓடந்தாங்கல் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசில் மாவட்ட சமூக நல அலுவலர் சற்குணம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து காப்பக உரிமையாளர்கள் ராஜா, மலர்கொடி ஆகியோரை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.