டெல்லி பாஜ தலைவராக சதீஷ் உபாத்யா நியமனம்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு
புதுடெல்லி: டெல்லி மாநில பாஜ தலைவராக சதீஷ் உபாத்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் நேற்றிரவு வெளியிட்டார்.
டெல்லி சட்டமன்றத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது. முன்னதாக டெல்லி மாநில பாஜ தலைவராகவும், டெல்லி முதல்வர் வேட்பாளராகவும் ஹர்ஷவர்தன் நியமிக்கப்பட்டார். இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வர் பொறுப்பை ஏற்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 40 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டசபை கலைக்கப்படவில்லை. சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த மாநில துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக அண்மையில் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதனால் எந்த நேரமும் டெல்லி சட்டசபை கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் டெல்லி மாநில பாஜ தலைவராக இருந்த ஹர்ஷவர்தன் எம்பியாகி தற்போது மத்திய சுகாதார அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். மாநில அரசியலுக்கு திரும்ப விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டார். மாநில பாஜ தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார். இதை தொடர்ந்து டெல்லி மாநில பாஜ தலைவராக சதீஷ் உபாத்யா நேற்று நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் நேற்றிரவு பிறப்பித்தார். தெற்கு டெல்லி மாநகராட்சி நிலைக்குழு தலைவராக தற்போது சதீஷ் உபாத்யா பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜ முதல்வர் வேட்பாளராக சதீஷ் உபாத்யா நிறுத்தப்படுவார் என பாஜ வடடாரங்கள் தெரிவித்தன.