ஈராக்கில் குண்டு வீச்சு ராணுவ தளபதி சாவு
பாக்தாத்:ஈராக்கின் பலுஜா நகரில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் நேற்று கடுமையான சண்டை நடந்தது. தீவிரவாதிகள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் ராணுவ தளபதி பரிதாபமாக உயிரிழந்தார். ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் கடும் போர் நடந்து வருகிறது. தீவிரவாதிகள் கைப்பற்றிய திக்ரித் உள்பட பல நகரங்களை மீட்க ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
தலைநகர் பாக்தாத்துக்கு மேற்கே தீவிரவாதிகள் பிடியில் உள்ள பலுஜா நகரை மீட்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தீவிரவாதிகளும் ராணுவத்தினரை முன்னேற விடாமல் பதில் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், நேற்று தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்கியதில் ராணுவத்தின் 6வது பிரிவு தளபதி நாஜிம் அப்துல்லா அல் சுதானி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு பாக்தாத்தில் நேற்று நடந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சர் சதன் அல் துலாய்மி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். ஈராக்கில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகளுடன் நடந்து வரும் சண்டையில் 20க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.