நெய்மர் இல்லாத நிலையிலும் அரையிறுதியில் பிரேசில் நிச்சயம் வெற்றி பெறும் முன்னாள் நட்சத்திரம் ரொனால்டோ நம்பிக்கை
முதுகெலும்பில் ஏற்பட்ட முறிவால் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் பிரேசில் ரசிகர்களின் இதயம் நொறுங்கிப்போயுள்ளது. தங்களது அணியின் வெற்றி வாய்ப்பையை நெய்மரின் வெளியேற்றம் பாதிக்கும் என ரசிகர்கள் பலர் கூறுகின்றனர். ஆனால், நெய்மர் இல்லாத நிலையிலும், பிரேசில் அணி அரையிறுதியில் ஜெர்மனியை நிச்சயம் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரேசில் அணியின் முன்னாள் வீரர் ரொனால்டோ.‘’நெய்மருக்கு ஏற்பட்ட காயத்தால் அனைவருக்குமே சிறிதளவு அச்சம் ஏற்பட்டுள்ளது. பிரேசில் அணி தனது நட்சத்திர வீரரை இழந்துள்ளது, எதிரணிகளுக்கு முக்கிய அச்சுறுத்தலாக விளங்கியவரை இழந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அரையிறுதியில் கால்பந்து உலகில் இரண்டு மிகப்பெரிய நாடுகள் மோதுகின்றன. இந்தப்போட்டியில் ஜெர்மனிக்கு நிச்சயம் நாங்கள் நெருக்கடி கொடுப்போம். ஆனால், குறிப்பாக நெய்மர் போன்ற வீரர்கள் இல்லாத நிலையில் அணியை எவ்வாறு சிறப்பாக விளையாட வைப்பது என்பது பயிற்சியாளர் ஸ்கொல்லாரிக்கு நன்கு தெரியும். சரியான நேரத்தில் அணியை அவர் நன்கு வழி நடத்திச் செல்வார். அரையிறுதிப்போட்டியில் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெல்லும்,’’ என்றார் ரொனால்டோ.