வாஷிங்டன்:அமெரிக்காவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அமெரிக்கா குடிபெயர்ந்தவர்களின் தேசம் என்று அதிபர் ஒபாமா பெருமைப்பட குறிப்பிட்டார். அமெரிக்காவின் சுதந்திர தினத்தையொட்டி இந்திய ஜனாதிபதி பிரணாப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அதிபர் ஒபாமா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அமெரிக்காவில் ராணுவத்தில் பணியாற்றி வரும் வெளிநாட்டில் பிறந்த 24 பேருக்கு இந்த விழாவில் அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது. அமெரிக்கா எப்போதுமே குடிபெயர்ந்தவர்களின் தேசம்தான் என்பதற்கு இதுவே ஒரு நல்ல சான்றாகும். கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு குவிந்து வருகின்றனர். எனவே அமெரிக்காவின் குடியேற்ற சட்டங்கள் மீண்டும் திருத்தப்பட வேண்டியுள்ளது. அவ்வாறு மாற்றினால்தான் உலகிலேயே மிகச் சிறந்த தேசமாக அமெரிக்கா தொடர்ந்து திகழ முடியும். நமது தேசத்திற்கு வெளியில் உள்ள மிகச் சிறந்த மனிதர்களை அமெரிக்காவை நோக்கி ஈர்க்க விரும்பினால் நாம் நிச்சயம் குடியேற்ற சட்டங்களில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். குடியேற்றத்துறை திறமையாக செயல்பட நான் நிச்சயம் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பேன். அமெரிக்கா எப்போதுமே குடிபெயர்ந்தவர்களின் தேசம் என்பதை நான் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று பேசினார்.
அமெரிக்காவின் சுதந்திர தினத்தையொட்டி இந்திய ஜனாதிபதி பிரணாப் உள்பட உலக தலைவர்கள் ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரணாப் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு உறுதியான அடித்தளத்தின் மீது உருவாக்கப்பட்டுள்ளது. 238வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அமெரிக்கா உலகின் அனைத்து நாடுகளுக்குமான தேசமாக திகழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.