தாம்பரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஜெ.ஜெ.நகர், புத்தர் தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர் (40). அதே பகுதியில் செருப்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். மனைவி தமினாபீவி (33). இவர்களுக்கு யாஸ்மின் (10), அப்துல் ரகுமான் (8), அப்துல் ஆரிப் (5) என்ற 3 குழந்தைகள்.கடந்த 3ம் தேதி 2 மகன்களுடன் பொழிச்சலூர் பஸ் நிலையத்தில் பல்லாவரம் செல்ல காத்திருந்தார். ஒரு மணி நேரத்துக்கு பிறகு மாநகர பஸ்சில் ரகுமானை ஏற்றி விட்டு இளையமகன் ஆரிப்பை இடுப்பில் தூக்கி கொண்டு ஏறினார் தமினாபீவி. அதற்குள் பஸ் கிளம்பியதால் மகனுடன் பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதில் ஆரிப் பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்தான். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து டிரைவர் ரவியை கைது செய்தனர்.இந்நிலையில் நேற்று காலை பொழிச்சலூரில் இருந்து மாநகர பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ&மாணவிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். பேச்சு வார்த்தையை தொடர்ந்து, காலை 10 மணிக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டது.இந்நிலையில் இன்று காலை குரோம்பேட்டை பணிமனை முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பணிமனை செயலாளர் காட்டுராஜா தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து ஊழியர் சங்க துணை செயலாளர் ஜெயராமன், செல்வராஜ், படப்பை ராஜேந்திரன் உள்பட டிரைவர்கள், கண்டக்டர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘பொழிச்சலூர் பகுதியில் தினமும் 17 முறை பஸ்கள் இயக்கப்படுகிறது. காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் டிரைவர், கண்டக்டரைதான் தாக்குகிறார்கள். எனவே நேர காப்பாளரை நியமிக்க வேண்டும்‘ என்றனர்.