நாகர்கோவில்: இந்து முன்னணி தலைவர் கொலையில், குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த வாலிபரை, சென்னையில் இருந்து வந்த தனிப்படை போலீசார் நேற்று இரவு சுற்றி வளைத்தனர். திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்தவர் சுரேஷ்குமார்(45). கடந்த மாதம் 18ம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமார், கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை அருகே உள்ள கக்கோடு கிராமத்தை சேர்ந்தவர். அவரது உடல் குமரி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு, அவரது சொந்த ஊரான கக்கோட்டில் தகனம் செய்யப்பட்டது.சுரேஷ்குமார் கொலையை கண்டித்து குமரியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 15 பஸ்கள் வரை உடைக்கப்பட்டன. இந்த கொலை வழக்கில் ஏற்கனவே ஒருவரை போலீசார் கைது செய்து இருந்தனர். மேலும், வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தனிப்படையினர் சென்று ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சுரேஷ்குமார் கொலையில் சம்பந்தப்பட்ட வாலிபர், குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சென்னையில் இருந்து 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று மாலை குமரி மாவட்டம் வந்தனர். அவர்கள் திருவிதாங்கோடு பகுதியில் முகாமிட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த முகமது ராபி என்பவரை போலீசார் பிடித்தனர். பின்னர், அவரை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணையை தொடங்கினர். இன்று காலை விசாரணை முடிந்து, அவரை தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து சென்றனர். போலீசாரின் விசாரணையின் போது, பல முக்கிய தகவல்களை முகமது ராபி கூறியிருப்பதாக தெரிகிறது. இது பற்றிய முழு விவரங்கள் இன்று மாலை வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு குமரி மாவட்ட பா.ஜ. மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, நாகர்கோவிலில் இருக்கும் போது வெட்டப்பட்டார். இந்த வழக்கிலும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இப்போது சுரேஷ்குமார் கொலை வழக்கிலும் குமரி மாவட்டத்தை சேர்ந்த நபர் பிடிபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.