9 மாவட்டங்களில் விளையாட்டு விடுதி அமைச்சர் தகவல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு 6 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல விளையாட்டு அலுவலகம் கடந்த 1ம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் செயல்பட தொடங்கி உள்ளது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் நேற்று மாலை ஆய்வு செய்தார். விளையாட்டு விடுதியில் தங்கி உள்ள மாணவிகளிடம் பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் சுந்தரராஜன் அளித்த பேட்டி:விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்காக நடப்பு ஆண்டில் ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன. அதில், திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மாணவிகளுக்கு விளையாட்டு விடுதி செயல்படுகிறது. மேலும் 9 மாவட்டங்களில் விளையாட்டு விடுதியும், மாவட்ட விளையாட்டு அரங்கமும் விரைவில் அமைக்கப்பட உள்ளது.