மலிவு விலை உணவக இடப்பிரச்னை: அதிமுக கவுன்சிலர்கள் அடிதடி
தாராபுரம்: தாராபுரம் நகராட்சியில் மலிவுவிலை உணவகம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டிடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் எடுத்த வகையில் அதிமுகவினருக்கு இடையே கோஷ்டி சண்டை ஏற்பட்டு, கவுன்சிலர்கள் சட்டையை கிழித்துக் கொண்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுகவினர் நகரமன்ற தலைவர் தலைமையிலும், துணைத் தலைவர் தலைமையிலும் தனித்தனி கோஷ்டிகளாக இயங்கி வருகின்றனர். நகராட்சி கடை அனைத்தையும் மறு ஏலம் விடும் பிரச்னையின் போது, இந்த கோஷ்டிகளின் மோதல் உச்சத்தை அடைந்தது. தீர்மானத்தை ஒரு கோஷ்டியினர் ஆதரிக்க, மற்றொரு கோஷ்டியினர் எதிர்த்தனர். இறுதியில் ஏலம் நடைபெற்றது. இதனால் ஒரு கோஷ்டியினர் ஆத்திரம் அடைந்தனர்.
தற்போது தமிழக அரசின் மலிவு விலை உணவகம் திறக்க, நகராட்சி நிர்வாகம் இடம் தேர்வு செய்து, கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவும் நடைபெற்றது. கட்டிடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டபோது, எந்த ஒப்பந்ததாரரும் முன்வரவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் நிர்பந்தத்தின் பேரில் வலுக்கட்டாயமாக ஒரு நபருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று, எதிர் கோஷ்டியைச் சேர்ந்த 2வது வார்டு உறுப்பினர் ராசகுமாரன் கவுன்சிலர் பழனியப்பனிடம் இது சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்த போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது முற்றிப்போய் சண்டையாக மாறியது. இருவரும் அடித்துக்கொண்டதில் சட்டைகள் கிழிந்தன. அதன் பிறகு இரு கோஷ்டியினரும் தாராபுரம் காவல் நிலையத்தில் ஒருவர் மீது மற்றொருவர் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை ஆய்வாளர் சிவக்குமார் இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார். யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை.