பொதுத் தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு ஜெயலலிதா நாளை பரிசு வழங்குகிறார்
சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா நாளை பரிசுகள் வழங்குகிறார். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தமிழக அரசு ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கி பாராட்டி வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் ஊத்தங்கரை மாணவி 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலாவது இடத்தை பிடித்தார். தர்மபுரி மாணவி 1192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தார். நாமக்கல் துளசிராஜன், சென்னை நித்யா ஆகியோர் 1191 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3ம் இடத்தை பிடித்தனர். இதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வில் 465 மாணவ மாணவியர் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். மேற்கண்ட பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசுகள் வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது. இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் மேற்கண்ட இரு தேர்வுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்துள்ளதால், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அத்தனை பேருக்கும் பரிசுகளை வழங்குவதில் சிரமம் இருக்கும். அதனால் முதல் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு மட்டும், நாளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா பரிசுகள் வழங்குகிறார். இரண்டு மற்றும் 3ம் இடங்கள் பிடித்த மாணவ மாணவியருக்கு நாளை மதியம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பரிசுகள் வழங்குகிறார்.