‘எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து’ ஈராக்கில் தவிக்கும் நர்ஸ் போனில் கதறல்
தூத்துக்குடி: ஈராக்கில் ராணுவத்துக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. திக்ரித், பலுஜா, மொசூல் உள்பட 5 முக்கிய நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். உள்நாட்டு போர் காரணமாக அங்கு ஏராளமான இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.ஈராக்கின் திக்ரித் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தூத்துக்குடி கால்டுவெல் காலனி 5வது தெருவைச் சேர்ந்த லெசிமா ஜெரோஸ் மோனிஷா என்பவர் நர்சாக பணியாற்றி வருகிறார். இதே ஆஸ்பத்திரியில் தமிழகம், கேரளாவை சேர்ந்த 45 பெண்கள் நர்சாக பணிபுரிந்து வருகின்றனர். திக்ரித் நகரை கைப்பற்றிய தீவிரவாதிகள் ஆஸ்பத்திரியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு தனது தாய்க்கு லெசிமா போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ‘ஈராக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. ஆஸ்பத்திரியை கைப்பற்றிய தீவிரவாதிகள், மொசூல் நகரத்துக்கு எங்களை அழைத்து செல்லப் போவதாகவும், பிரச்னை செய்யாமல் வர வேண்டும் என்றும் துப்பாக்கி முனையில் மிரட்டி சென்றனர். தீவிரவாதிகள் மிரட்டல் குறித்து நாங்கள் ராணுவத்தை தொடர்பு கொண்டு கூறினோம். ராணுவத்தினர் எங்களிடம் தீவிரவாதிகள் கூறும் இடத்துக்கு செல்ல வேண்டாம். ஆஸ்பத்திரியை விட்டு ஒரு போதும் வெளியே வர வேண்டாம் என கூறுகின்றனர்.தீவிரவாதிகளை விரட்ட ராணுவத்தினர் குண்டுகளை வீசுகின்றனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். திக்ரித்தில் இருப்பதால் உங்களுடன் போனில் தொடர்பு கொள்ள முடிகிறது. மொசூலுக்கு அழைத்துச் செல்லப்பட்டால் எங்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டு விடும். எனவே உடனடியாக எங்களை மீட்க தமிழக அரசை வலியுறுத்துங்கள் என போனில் கூறி கதறி அழுதபடி தெரிவித்துள்ளார். லெசிமாவை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.